Latest Post

"சாட்டை" இயக்குநர் அன்பழகனுக்குத் திருமணம்... !

சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் திருமணம் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தமிழக அரசு பள்ளிகளின் நிலைமையை மிக யதார்த்தமாய் எடுத்துக்காட்டிய படம் சாட்டை.

ஷலோம் நிறுவனம் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் தயாரிப்பில் இயக்குநர் நடிகர் சமுத்திரகனி நடித்து வெற்றியடைந்த படம் சாட்டை. இப்படத்தை இயக்குநர் அன்பழகன் இயக்கியிருந்தார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவை ஆழமாக எடுத்துச்சொன்ன இந்த படம் அன்பழகனுக்கு சிறந்த இயக்குநர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தது.

அடுத்தகட்ட படங்களில் ஆர்வமாக இருக்கும் இயக்குநர் அன்பழகனுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகள் பெயர் எம்.மாலா. எம்.எஸ்.சி.,பிஎட்., படித்தவர். இன்று இவர்கள் திருமணம், பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்தில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ் எனும் பெயரில் அடுத்த படம் இயக்குகிறார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்ஏசி கூறுகையில், "விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி, இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது.

3 சிறிய கதைத் தொடர்களை ஒருங்கிணைத்து, இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன். இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தில் 70 வயது முதியவராக பாத்திரமேற்று நான் நடித்துள்ளேன். எனக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக, இனிமேல் திரைப்படங்களை இயக்க வேண்டாம் என்று என்னுடைய மகன் விஜய் அன்புக் கட்டளையிட்டுள்ளார். ஆனால், உழைப்புக்கு ஏது ஓய்வு என்பது எனது கருத்து.

கத்திக்கு சிக்கல் இல்லை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கத்தி' திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர்," என்றார்.

 

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை... - எண்பதுகளில் சினிமா இசையை அனுபவித்த எவருடைய காதுகளிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் நிரந்தரமாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தத் தலைமுறையினரும் முதல் முறை கேட்டதுமே ரசித்து பரவசப்படும் இனிமையான இந்தப் பாடலை, மகேந்திரன் இயக்கத் திட்டமிட்டிருந்த மருதாணி படத்துக்காகப் போட்டிருந்தார் ராஜா.

ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. எனவே அந்தப் பாடலை அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவுக்குக் கொடுத்தார் இளையராஜா.

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

ஆனால் படத்தின் இசைத் தட்டில் இடம்பெற்ற புத்தம் புதுக்காலை, படத்தில் இடம்பெறவில்லை.

பாடல் வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடலை நேற்று வெளியான மேகா படத்தில் இடம்பெறச் செய்துள்ளார் இளையராஜா. இந்தப் படத்துக்கு இசையும் அவரே.

ஒரிஜினல் பாடலுக்கும், ராஜா புதிதாக இசையமைத்துக் கொடுத்துள்ள இந்தப் பாடலுக்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதற்கான காரணத்தை படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பாடல் குறித்து இளையராஜா கூறுகையில், "அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக இந்தப் பாடலை நான் கொடுத்தபோது, அதை படமாக்கிய பாரதிராஜா, நீளம் கருதி பின்னர் நீக்கிவிட்டார். மேகா படத்தில் பொருத்தமான ஒரு சூழலில் இதைப் பயன்படுத்த விரும்பினார்கள். அதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்துள்ளேன்," என்றார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் புத்தம் புதுக் காலை பாடலுக்கு அத்தனை வரவேற்பு.

மேகா படம் நேற்று வெளியானது. படத்தை டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஸ்வின்- சிருஷ்டி நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார்.

 

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

சென்னை: மலையாளத்திலும், தமிழிலும் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார்.

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற வெற்றிப் படத்தினை விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்கியவர் பாலாஜி தரணிதரன்.

"என்னாச்சு?" என்ற வசனம் பிரபலமாவதற்கு காரணமே இப்படம்தான்.

ஒரு பக்க கதை:

இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் புதிய படத்திற்கு "ஒரு பக்க கதை" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை நாளை மறுநாள் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

ஜெயராம் மகன் காளிதாஸ்:

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி இன்னும் தேர்வாகவில்லை.

ஒளிப்பதிவாளர்கள்:

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் ஒளிப்பதிவாளர்களான சி.பிரேம்குமார் மற்றும் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் இப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.

தயாரிப்பு, இசையும்:

இப்படத்திற்கு கோவிந்த மேனன் என்பவர் இசையமைக்கிறார். வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை பாவனா.

தமிழில் வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. தெலுங்கிலும் நடித்துள்ளார். பின்னர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

ஆனால் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளார் பாவனா. இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வருடம் ஜனவரியில் எனது சகோதரருக்குத்தான் திருமணம் நடைபெற இருக்கிறது. எனக்கு இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்," என்றார்..

சமீபத்தில், கன்னட பட இயக்குநர் ஒருவர் புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய நடிகை பாவனாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். அடுத்த இரு தினங்கள் கழித்து, 'உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சாமே... அப்ப நடிக்க மாட்டீங்கதானே," என்று கேட்டுள்ளார்.

என்னடா இது.. பொழப்பைக் கெடுத்துடுவாங்க போலிருக்கே.. என்று அலறியடித்துக் கொண்டு இந்த மறுப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் பாவனா.

 

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி.

ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன.

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான்.

பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா.

இந்த முத்தச் சம்பவம் எங்கே எப்போது நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. ஆனால் 'இந்த வகை முத்தங்கள் காமத்தில் சேர்த்தியில்லை' எனும் விளக்கம் நிச்சயம் தயாராக இருக்கும்!

 

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

மும்பை: கோச்சடையான் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தை தங்களின் தலைமைக் குழுவில் இணைத்துக் கொண்டது இந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா.

கிரியேட்டிவ்-செயல்திட்ட இயக்குனர் மற்றும் தென்னிந்தியாவின் ஈராஸ்நவ் உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளின் தலைவர் என இரு பெரிய பொறுப்புகளில் சவுந்தர்யாவை நியமித்திருப்பதாக ஈராஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த இரட்டைப் பொறுப்பின் மூலம், ஈராஸ்நவ் உள்பட அனைத்து புதிய ஊடக தளங்களுக்கும் தலைவராகிறார் சவுந்தர்யா. இந்நிறுவனத்தின் படங்களுக்கு தனது படைப்புத் திறனை வழங்க உள்ளார்.

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கு சவுந்தர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராஸ்நவ், மொபைல், டிடிஎச், ஐபிடிவி மற்றும் பிராண்பேண்ட் உள்ளிட்ட டிஜிட்டல் துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிப்பதாகக் கூறிய அவர், டிஜிட்டல் களத்தில் சவுந்தர்யாவின் அனுபவம், நிறுவனத்தின் செயல்திட்டங்களை வழிநடத்தும் அளவுக்கு அவரை சிறந்த தலைவராக உருவாக்கும் என்றார்.

ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சவுந்தர்யா கூறினார்.

ஈராஸ் நிறுவனத்தின் புதிய பொறுப்புகளில் சவுந்தர்யா கவனம் செலுத்தினாலும், தனக்கு விருப்பமான தொழிலான திரைப்பட இயக்குனர் பணியையும் தொடருவார்.

அடுத்து ஈராஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இயக்கிய ‘கோச்சடையான்' படத்தின் தயாரிப்பாளர்கள் ஈராஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

பெங்களூர்: நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

 

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் கவுதம்மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர். இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது.

108 நம்பருக்கு பேசி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டு பிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

மும்பை: விநாயக பெருமான் குறித்து ராம் கோபால் வர்மா டிவிட்டரில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா நேற்று தனது டிவிட்டரில் ஒரு கீச்சு வெளியிட்டார். அதில் விநாயகர் சதுர்த்தி குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தன. சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட விநாயகரின் தலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்கோபால் வர்மா, விநாயகரின் வயிறு பெரிதாக இருப்பதற்கு, யானை தலையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதுதான் காரணமாக இருக்குமோ? அல்லது, சிறு வயதில் இருந்தே விநாயகருக்கு பெரிய வயிறுதானா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த தினத்தை குறிப்பதா, அல்லது யானையின் தலையை பொருத்திய தினத்தை குறிப்பதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

புராணங்கள் தெரிந்த பண்டிதர்கள் இந்த கேள்விக்கான விடையை தெரிவித்திருந்தால் பிரச்சினையாகியிருக்காது. ஆனால் வட இந்திய அரசியல்வாதிகள் இதை சர்ச்சையாக்கிவிட்டனர். ராம்கோபால் வர்மா உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவசேனாவின், பிரேம் சுக்லா கூறுகையில், விநாயகர் சதுர்த்தி என்பது, மகாராஷ்டிர மாநிலத்தாரின் கலாசாரத்தில் ஊறியது. விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ராம்கோபால் வர்மா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருப்பது மராட்டியர்களை அவமரியாதை செய்வதை போலவாகும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான சஞ்சய் நிருபம் கூறுகையில், ராம்கோபால் வர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார். பாஜகவின் என்.சி.சாய்னாவும் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளில் இருந்தும் கண்டனம் வெளியானதை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா தனது டிவிட்டுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.